வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் இன்று ரயில் மறியல்… 20 ஆயிரம் ஆர்.பி.எஸ்.எப். வீரர்களை குவித்த ரயில்வே

 

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் இன்று ரயில் மறியல்… 20 ஆயிரம் ஆர்.பி.எஸ்.எப். வீரர்களை குவித்த ரயில்வே

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் செய்யும் நோக்கில், கடந்த செப்டம்பரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டங்களை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் அந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த நவம்பர் இறுதியில் முதல் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் இன்று ரயில் மறியல்… 20 ஆயிரம் ஆர்.பி.எஸ்.எப். வீரர்களை குவித்த ரயில்வே
ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்கள்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 18ம் தேதியன்று (இன்று) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து இருந்தனர். பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் நேற்று பேசுகையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபடுவார்கள். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் இன்று ரயில் மறியல்… 20 ஆயிரம் ஆர்.பி.எஸ்.எப். வீரர்களை குவித்த ரயில்வே
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு ரயில்வே சில ரயில்களின் பாதையை மாற்றி உள்ளது. சில ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கூடுதலாக 20 கம்பெனி ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையை (ஆர்.பி.எஸ்.எப்.) குவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்.பி.எஸ்.எப். இயக்குனர் ஜெனரல் (டி.ஜி.) அருண் குமார் கூறுகையில், உளவுத்துறை தகவல்களை சேகரிப்போம். பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மற்றும் வேறு சில பகுதிகளில் எங்கள் கவனம் இருக்கும். இந்த பகுதிகளில் ரயில் பாதுகாப்பு சிறப்பு படையின் 20 கம்பெனிகளை (சுமார் 20 ஆயிரம் வீரர்கள்) நாங்கள் நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.