போலி கோழி முட்டை புகார்… கோழிப் பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

 

போலி கோழி முட்டை புகார்… கோழிப் பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருப்பூரில் நாட்டுக்கோழி முட்டை என்று கூறி லகான் முட்டைகள் நிறம் மாற்றி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நாட்டுக் கோழி முட்டை என்று கூறி லகான் கோழி முட்டைகள் நிறம்மாற்றி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதன் அடிப்படையில் பல்லடத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகர் விஜய லலிதாம்பிகா தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.

போலி கோழி முட்டை புகார்… கோழிப் பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கடைகளில் ஒரே சைஸ் கொண்ட வெள்ளை முட்டை ரூ.5க்கும், பழுப்பு நிற முட்டை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்ததை அறிந்த அவர்கள் முட்டையை யார் விற்பனை செய்தது என்று விசாரித்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியில் உள்ள பண்ணையைச் சேர்ந்தவர்கள் முட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் அதிகாரிகள் பல்லடம் சென்று கோழிப் பண்ணையை ஆய்வு செய்தனர்.

அங்கு வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் முட்டையிடும் இருவகையான கோழிகள் வளர்க்கப்படுவதாக பண்ணை நிர்வாகிகள் கூறியுள்ளனர். இரண்டும் ஒரே விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஆனால் கடையில்தான் அதை நாட்டுக் கோழி முட்டை என்று கூறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய விஜய லலிதாம்பிகை, “நாட்டுக் கோழி முட்டை அளவில் சிறியதாக இருக்கும். 30 முதல் 35 கிராம் எடைக் கொண்டதாக இருக்கும். அதில் மஞ்சள் கரு மிகவும் அடர் நிறத்திலும் முட்டை ஓடு பழுப்பாக, கடினமாக இருக்கும். ஆனால், இந்த வகை கோழி முட்டையின் எடை 55 முதல் 60 கிராம் வரை உள்ளது. எனவே, அளவில் பெரிய இந்த முட்டைகளை நிறத்தை வைத்து நாட்டுக்கோழி முட்டை என்று நினைத்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம்” என்றார்.