’’சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா?’’-கலைஞர் நினைவுநாளில் ஸ்டாலின் உருக்கம்

 

’’சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா?’’-கலைஞர் நினைவுநாளில் ஸ்டாலின் உருக்கம்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா என்ற சினிமா பாட்டு போல தன் ஊர் மீது பாசம் வைத்திருந்தவர் கலைஞர கருணாநிதி என்று உருக்கமாக நினைவலைகளை தெரிவித்தார் ஸ்டாலின்.

திருக்குவளையில் உள்ள இல்லத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்துவைத்தார். கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது காணொளி மூலமாக பேசிய ஸ்டாலின், ‘’கலைஞரின் குருகுலமான தந்தைபெரியார் பிறந்த ஈரோட்டிலும், கலைஞரை ஆளாக்கிய அண்ணா பிறந்த
காஞ்சியிலும், போராட்டத்திற்கு முதல் களமாக அமைந்த திருச்சியிலும், கலைஞர் திரையுலக பயணத்தை தொடங்கிய சேலத்திலும் கலைஞரின் திருவுருவ
சிலையை நான் திறந்துவைத்திருக்கிறேன். இப்படியே தமிழமெங்கிலும் சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில்,
கொரோனாவினால் அந்த சிலை திறப்பு விழாக்கள் எல்ல்லாம் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் இரண்டாமாண்டு நினைவு தினமாக இருக்கின்ற காரணத்தினால் அதன் நினைவாக கலைஞர் பிறந்த திருக்குவளையில், அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலையை திறந்து வைத்திருக்கிறோம்’’என்றார்.

மேலும், ‘’சென்னையில் இருந்தாலும் என் நினைவுகள் எல்லாம் இப்போது திருக்குவளையில்தான் நின்றுகொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளால்
என்னால் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் சென்னையில் இருந்தபடியே சிலையை திறந்து வைத்திருக்கிறேன்.

அவர் சிலையை பார்க்கும்போது தலைவர் கலைஞரே மீண்டும் திருக்குவளையில் எழுந்திருப்பது போல இருக்கிறது. யாதும் ஊரே என்று வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் அவர் என்றாலும், எல்லா ஊர்களுக்குசென்று வந்திருந்தாலும், பிடித்த ஊர் எது என்று கேட்டால், நான் பிறந்த திருக்குவளை என்று சொல்லுவார். பிறந்த ஊரின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் கலைஞர். சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா என்றுபாடல் உண்டு.அதுமாதிரி தன் ஊர் மீது பாசம் வைத்திருந்தவர் கலைஞர்’’என்று நெகிழ்ந்தார்.