Home விளையாட்டு கிரிக்கெட் பண்ட் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்... மரண பயம் காட்டிய அஸ்வின்,விஹாரி - இது இந்தியாவின் ’புதைச்சாலும் புதையலா வருவேன்டா’ வெர்சன்!

பண்ட் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்… மரண பயம் காட்டிய அஸ்வின்,விஹாரி – இது இந்தியாவின் ’புதைச்சாலும் புதையலா வருவேன்டா’ வெர்சன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி பரிதாப தோல்வியடைந்தது. பாண்டிங் உள்ளிட்ட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் “இது அவ்ளோதான் முடிஞ்சி; இந்தியா 0-4 என்று தொடரை இழக்கப் போகுது” என்று கேலி செய்தார்கள். இரண்டாவது டெஸ்டிலேயே ரஹானே அண்ட் கோ அவர்களின் கருத்தை அடித்து நொறுக்கியது. கேலி செய்த வாய்கள் புலம்பித் தள்ளின.

முதல் வெற்றி கொடுத்த பூஸ்டுடன் 3ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய போட்டியில் திட்டம் தீட்டி ஆஸி. பில்லர்களான ஸ்மித்தையும் லபுசானேவையும் தூக்கிய இந்திய பவுலர்களின் பாட்சா பலிக்கவில்லை. இருவரும் பெர்பெக்ட் கேம்பிளானோடு வந்து புரட்டி எடுத்துவிட்டனர்.

லபுசானே சதத்தைத் தவறவிட்டாலும், கம்பேக் நாயகன் ஸ்மித் சதமடித்து மீண்டும் அதிரிபுதிரியான கம்பேக் கொடுத்தார். இதனால் ஆஸியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. எல்லா புகழும் ரெண்டு கேட்ச்சுகளை விட்ட ரிஷப் பண்ட்டுக்கே. ஏதோ ஜடேஜாவின் கை செய்த அற்புதத்தால் 338 ரன்னுக்கு ஆஸி. ஆல் ஆவுட்டானது.

இந்த டெஸ்டில் ரோஹித் இருக்கிறார் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ அரைசதம் கூட அடிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நடையைக் கட்டினார். இளம்வீரர் கில் ஓரளவு நம்பிக்கை கொடுத்தாலும், அரைசதத்தை அடித்த கொண்டாட்டம் முடிவதற்குள் ரோஹித்துக்கு கம்பேனி கொடுக்க சென்றுவிட்டார்.

சென்ற முறை வழக்கத்துக்கு மாறாக சதமடித்து அசத்திய கேப்டன் ரஹானே இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டார் போலும். 22 ரன்களில் பெவியலன் திரும்பி இக்கட்டான நிலைக்கு அணியைத் தள்ளிவிட்டார் (ரப்பர் மரத்திற்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்லவே).

சிட்னி டெஸ்டில் இந்தியாவின் அஸ்தமனம் கிட்டத்தட்ட உறுதியாகிப் போனது. டெஸ்டின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவும் கணக்கு வைத்து அடித்தது போல 50 ரன்களுடன் அணியைப் பாதாளத்தில் தள்ளிவிட்டு ஹாயாக சென்றுவிட்டார். முடிவில் 244 ரன்களுக்கு ஆல்அவுட்டானது (ஆஸ்திரேலியா ஹேப்பி அண்ணாச்சி).

இந்தியாவைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டதாக எண்ணி இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. களமிறங்கியது. ஆனால் இந்தியாவோ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. 35 ரன்களுக்குள் அடுத்தடுத்து இரு ஓபனர்களான புக்கோவ்ஸ்கியையும் வார்னரையும் காலி செய்தது.

”சூப்பர் ஜி… சூப்பர் ஜி… இந்த ஃபயரா அப்படியே கன்டினியூ பண்ணுங்க” என்று இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் ஃபயர் (fire) விட இந்திய பீல்டர்கள் வழக்கம் போல பல கேட்ச் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு தண்ணி ஊற்றி ஃபயரை அணைத்துவிட்டனர்.

சின்ன கேப் கிடைச்சாலும் பூந்துருவாங்க… இப்போ பெரிய கேப்பே கிடைச்சிருக்கு… விடுவாங்களா இந்த மாற்றான் பிரதர்ஸ்? லபுசானேவும் ஸ்மித்தும் இந்திய பவுலர்களைப் புரட்டி எடுத்துவிட்டார்கள். ஸ்மித் ஒன்டே மோடுக்கு அப்கிரேட் ஆகி பொளந்துவிட்டார்.

பந்தை மாற்றியும் இந்திய பவுலர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. ஜடேஜாவுக்கு முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட காயத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங் போட இயலவில்லை. அவரின் பிரசன்ஸை யாராலும் ஈடுகட்ட முடியவில்லை. பும்ரா அதனைச் செயல்படுத்த நினைத்தும் பீல்டர்கள் ஒத்துழைக்கவில்லை. நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிருக்க வேண்டிய பும்ரா, பீல்டர்களின் கேட்ச் டிராப்பால் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார் (அந்த பீல்டிங் கோச் யாருப்பா?).

முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவால் தான் ஆஸி.யின் ரன் வேட்டையைத் தடுத்துநிறுத்த முடிந்தது. அவர் இல்லாத குறை இரண்டாவது இன்னிங்ஸில் அப்பட்டமாகத் தெரிந்தது.

இருவரும் வெற்றிகரமாக அரைசதத்தை எட்டிவிட்டனர். இன்னைக்கு சாவு நிச்சயம்டா என்று ரசிகர்கள் முணுமுணுக்க, சைனி போனா போகுதுனு லபுசானேவை அனுப்பி வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் மேத்யூ வேடையும் துணைக்கு அனுப்பினார்.

கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஸ்மித்திற்கு ரிவியூ கேட்டு ஒருவழியாக இந்தியா வழியனுப்பு விழா நடத்திவைத்தது. அப்பாடா… இந்தியாவுக்குக் கண்டம் போயிடுச்சுடா என்று ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஃபார்மிலேயே இல்லாத கேமரூன் கிரீனை ஃபார்முக்கு அழைத்துவந்தார்கள் இந்திய வீரர்கள்.

கூடவே, கேப்டன் பெய்ன் இறங்க இந்தியாவின் பவுலிங்கை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்கள். விரைவில் டிக்ளேர் செய்ய வேண்டும் என்பதால், அதிரடியாக ஆட வேண்டும் என்ற கேப்டனின் ஆணைக்கிணங்க சிக்சர்களை கிரீன் பறக்கவிட்டார். ஒருவழியாக பும்ரா அவரது விக்கெட்டை வீழ்த்த இரண்டாவது இன்னிங்ஸை பெய்ன் முடிவுக்குக் கொண்டுவந்தார். 406 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக பெய்ன் அறிவித்தார்.

407 ரன்கள் என்ற மிக மிகக் கடினமான இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ”சாதாரணமான இலக்கு என்றாலே இந்தியா தவழும். இதுல 407 ரன்னா? அவ்ளோ தான்” என்பது போல சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்துவிட்டனர்.

அவர்கள் நினைத்தது போலவே கில் 31 ரன்களில் விளையாட, பொறுப்பைத் தட்டிக்கழிப்பது போல ரோஹித் சர்மா அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினார் (மற்ற நாட்டு வீரர்களுக்கு 100ல கண்டம்னா நம்மாட்களுக்கு 50ல கண்டம் போல).

ரஹானே முதல் இன்னிங்ஸுல விட்டத இரண்டாவது இன்னிங்ஸுல பிடிச்சிருவாருனு எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏகபோகமாக இரண்டாவது முறையும் ஏமாற்றத்தையே பரிசளித்தார். சோழி முடிஞ்சிடுச்சுடா என்று இந்திய ரசிகர்கள் சோகக் கடலில் மூழ்க, அமைதிப்படை அமாவாசை போல ஆஸி. வீரர்கள் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தனர்.

ஆனால், நம்முடைய X-factor (எப்போ எப்படி ஆடுவார்னு யாராலயும் யூகிக்க முடியாத பிளேயரைக் குறிக்கும் சொல்) சூறாவளி ரிஷப் பண்ட் அதிருஷ்டவசமாக ஃபார்முக்கு திரும்பிவிட்டார். அப்புறம் என்ன ஒரே மஜா தான்.

நீங்க மட்டும் தான் ஒன்டே மோடுக்கு மாறுவீங்ளா என்று சொல்லி சொல்லி அடித்தார் பண்ட் என்னும் சூறாவளி (அமாவாச கீழ இறங்கி உட்காரு). மறுபுறம் புஜாரா பாயை விரித்து படுக்க, ”நீங்க வேடிக்க மட்டும் பாருங்க அங்கிள்” என்பது போல் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார் இளஞ்சிறுத்தை பண்ட்.

ஒருவகையில் பண்டும் தவான் போல தான். ஏனென்றால், எப்போதெல்லாம் மோசமான செயல்பட்டால் அணியை விட்டு தூக்குங்க என்ற கலகக்குரல் எழும்புதோ, அப்போலாம் மேட்ச் வின்னிங் பெர்பார்மென்ஸ் கொடுத்து எஸ்கேப் ஆகிடுவாரு (கிரேட் எஸ்கேப்). அந்த மாதிரியான ஒரு ஆட்டம் தான் பண்ட் ஆடுனது. யார் கண்பட்டதோ சதத்தை அடிக்க முடியாமல் 97 ரன்களில் வெளியேறிவிட்டார் திரு. X-factor.

புஜாரா இன்னைக்கு நங்கூரமா நின்னு ஜெயிச்சி கொடுத்திருவாருனு நினைத்துக்கொண்டிருக்கும்போதே பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். புஜாரா சென்ற உடனே ரசிகர்களின் நம்பிக்கை டவுனாகியது. ஏனென்றால், அஸ்வின், ஜடேஜா தவிர்த்து நம்முடைய டெய்லெண்டர்களின் டிராக் ரெக்கார்ட் அப்படி (கம்பேனி சீக்ரெட்ட போட்டு உடைத்ததுக்கு மன்னித்து அருள்வீர்களாக!).

”மெய்ன் பேட்ஸ்மேன் எல்லாத்தையும் அனுப்பிச்சாச்சி, குடைச்சல் கொடுக்குற ஜடேஜாவும் இல்ல அஸ்வினையும் விஹாரியையும் தூக்கிட்டா வேல முடிஞ்சது… பழி தீர்த்திடலாம்” என்ற கனவில் மிதந்த ஆஸி. வீரர்களின் முகத்தில் அப்படியொரு தேஜஸ். ஆனால் அது நீடிக்கவில்லை.

அந்த தேஜஸை கொஞ்சம் கொஞ்சமாக மங்க செய்தார் விஹாரி. தொடர்ந்து கேட்சுகளை விட்டது, இரண்டு டெஸ்டிலும் ரன்கள் அடிக்காதது என ஏகப்பட்ட பிரஸர்களுடனும் காயத்துடனும் ஆடிக்கொண்டிருந்தார். மொத்த பிரஸ்ட்ரேசனையும் இந்த ஒத்த இன்னிங்ஸில் அடித்துநொறுக்கிவிட்டார் (அவர் பந்தை அடிக்காமல் இருந்தது வேறு கதை).

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்களின் அதிரடி என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அங்கு யார் அதிக நேரம் தாக்குப்பிடித்து வெற்றிக்கான ரன்களைச் சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவும் அதுவே. புஜாரா ஆமை போல் ஆடுவதாக இணையத்தில் கலாய்த்துக் கொண்டிருக்கும் 2k கிட்ஸ்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

ஒரு வீரரை முழுமையான கிரிக்கெட் வீரர் என்று சொல்வதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டைத் தான் உதாரணமாகக் காட்ட முடியும். அந்த வகையில் மனுஷன் இன்று பின்னி பெடல் எடுத்துவிட்டார் (இந்தியாவுக்கு இன்னொரு புஜாரா கிடைச்சிட்டான்டா… கவனிக்கவும் டிராவிட் அல்ல புஜாரா). எந்த அளவிற்கு என்றால் 100 பந்துகளுக்கு வெறும் 7 ரன்கள் மட்டும் எடுத்து மிரட்டிவிட்டார்.

சிறுகச் சிறுக ஆஸி. வீரர்களின் கனவு கலைந்துகொண்டே போனது. மறுமுனையில் கிடைக்கிற கேப்பில் அஸ்வின் பந்தைப் பவுண்டரிகளுக்குத் துரத்தினார். எவ்வளவு முயற்சி செய்தும் ஆஸி. பவுலர்களால் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை.

இந்த ஹீரோயிக் பெர்பார்மென்ஸை இருவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக அப்படியொரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்கள். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்களுக்கு 334 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிராவும் ஆனது.

நீ புதைச்சாலும் புதையலா வருவேன்டா என்று இந்தியா மீண்டும் தனது முத்திரையை அழுத்தம் திருத்தமாகப் பதித்திருக்கிறது. இதுபோன்ற ஃபைட்டிங் ஸ்பிரிட் இருக்கும் வரையிலும் கிரிக்கெட்ல இந்தியா எப்போவும் கிங்கு தான். இந்தியாவின் ராஜ மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல் சிட்னி டெஸ்ட்.

சர்வநிச்சயமாக இது ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த வெற்றிகரமான தோல்வியே. எதிரிய கொன்னா தான் வெற்றினு கிடையாது; அவனுக்கு மரண பயத்த காட்டினாலும் வெற்றி தான்! (தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதினாலும் ஆட்சேபனை இல்லை)

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews