கொரோனா பரவல் எதிரொலி – ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து!

 

கொரோனா பரவல் எதிரொலி – ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து!


ஈரோடு

கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக
மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு தெரிவித்து உள்ளது.


மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி 13 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல அரிய வகை புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்த புத்தக திருவிழாவை ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள திருப்பூர், நாமக்கல்லை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொல்வார்கள்.

மேலும் புத்தக திருவிழாவின்போது நாள்தோறும் மாலை வேளைகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக கடந்தாண்டு ஈரோடு புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவல் எதிரொலி – ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து!

இதனால் நடப்பு ஆண்டு புத்தத் திருவிழா நடத்தப்படும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக, மக்கள் சிந்தனை பேரவை நிறுவனத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் மக்களை கூட்டம் கூட்டமாக வரவழைப்பது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என்றும், இதனால் இந்த ஆண்டு புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற வேண்டிய நாட்களில், மாலை நேரங்களில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மட்டும் இணையவழி தளங்களில் நடைபெறும் என்றும் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்து உள்ளார்.