பறவை காய்ச்சல் எதிரொலி – ஈரோடு மாவட்ட கோழி பண்ணையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

 

பறவை காய்ச்சல் எதிரொலி – ஈரோடு மாவட்ட கோழி பண்ணையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

ஈரோடு

பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து வாத்து, கோழி உள்ளிட்டவற்றை வாங்க கோழிப் பண்ணையாளர்களுக்கு தடை விதித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும், நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் புறக்கடைக் கோழிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பறவை காய்ச்சல் எதிரொலி – ஈரோடு மாவட்ட கோழி பண்ணையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

பறவைக் காய்ச்சல் ஏற்படாமலிருக்க, ஈரோடு மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் கேரளாவிலிருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, தீவனம் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை வாங்க கூடாது என்றும். கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக கேரளாவிலிருந்து குஞ்சு பொரிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் வாங்கப்பட்டிருந்தால், அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் கூறினார்.

அத்துடன், பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில், கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும் என அறிவுறுத்திய ஆட்சியர் கதிரவன், கோழிப் பண்ணையில் அசாதாரண இறப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கோழிநோய் ஆராய்ச்சி மைய உதவிய இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.