கேரட்டை சாப்பிடுவது இதய நோயைத் தடுக்க உதவுமாம்!

 

கேரட்டை சாப்பிடுவது இதய நோயைத் தடுக்க உதவுமாம்!

கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளது. அது நம்முடைய பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது என்று எல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இது தவிர கேரட்டால் கிடைக்கும் பலன்கள் பற்றிக் கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு தெரிவது இல்லை. கேரட் கண்களுக்கு மட்டுமல்ல, சருமம், இதயம், செரிமான மண்டலம் என பல உறுப்புகளை பாதுகாக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கான ஹெல்த்தி உணவாக கேரட் உள்ளது.

கேரட்டை சாப்பிடுவது இதய நோயைத் தடுக்க உதவுமாம்!

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின்தான் கேரட்டுக்கான ஆரஞ்சு நிறத்துக்குக் காரணம். இந்த பீட்டா கரேட்டின்தான் நம்முடைய உடலில் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த மாற்றமானது உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்க உதவுவதாக அமெரிக்காவின் இலினொய்ஸ் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதயத்தில் ஏற்படும் ஆத்ரோஸ்க்ளோரோசிஸ் எனப்படும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது. இதய ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு, கால்சியம் படிமம் மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.

ஆய்வாளர்கள் இளம் ஆரோக்கியமான 767 பேரிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வாளர்கள் எடுத்துள்ளனர். இவர்களின் வயது 18 முதல் 25 வரை மட்டுமே. இந்த ஆய்வில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ-வாக மாறுவதற்கும் கொலஸ்டிரால் அளவு குறைவதற்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தனர். வைட்டமின் ஏ-வாக மாற தேவையான BCO1 என்சைம் குறைந்த அளவில் உற்பத்தியானவர்களுக்கு கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருந்தது. கேரட் சாப்பிட்டதால் பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ-வாக மாற்ற தேவையான என்சைம் அதிக அளவில் சுரந்தவர்களுக்கு கொலஸ்டிரால் அளவு குறைவாக இருப்பதும் தெரியவந்தது.

மேலும் கேரட்டில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தம் உயர்வு மற்றும் தாழ்வுக்குக் காரணமான தாதுஉப்பு. அதிக பொட்டாசியம் உள்ள கேரட்டை சாப்பிடும்போது அது ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

கேரட்டை சமைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கண்கள், சருமம் பொலிவு பெறும். இதயத்தின் ஆரோக்கியம் காக்கப்படும்!