கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?

 

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?

கொரோனா நோய்த் தொற்றால் உலகமே முடங்கிவிட்டது. போக்குவரத்து, அலுவலகங்கள், பள்ளிகள் என பல நிறுவனங்களும் முழுமையான சேவையை அளிக்க முடியாமல் தேக்கம் கண்டுவிட்டன.

குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதக்கூடச் செல்ல முடியாத சூழலை கொரோனா ஏற்படுத்திவிட்டது. இனி, எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று கணிக்க முடியாத அளவுக்கு நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டார்கள். அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆன்லைன் கல்வி அவசியமா… அதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி சார்ந்து இயங்கி வரும் சிலரிடம் கேட்டோம்.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?
கல்வி குறித்த தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளர் விழியன்: “ஆன்லைன் வகுப்புகளில் பல வகைகள் இருக்கின்றன. இணையம் வழியாக நேரடியாக பாடங்கள் நடத்தப்படுவது ஒருவகை. இது இல்லாமல், மெயில் வழியாக பிடிஎஃப், வீடியோஸ் அனுப்புவார்கள். அதைப் பார்க்கவும், படிக்கவும் சொல்வார்கள்.

நாம் சொல்லும் ஆன்லை வகுப்பறை என்பது இப்போது தேவையா என்றால் நிச்சயம் வேண்டாம். ஆனால், குழந்தைகளின் கல்வி மீதான ஈடுபாட்டைத் தக்க வைக்க வேண்டியது அவசியம். கல்வியிலிருந்து குழந்தைகள் நீண்ட நாள்கள் விலகியிருந்தால் மீண்டும் கல்வி நோக்கி கொண்டுவருவது சிரமமாகி விடும். பல மாணவர்கள் இடைநிற்றலை நோக்கிச் செல்லும் அபாயம் நடக்கலாம். ஏனெனில், பல மாணவர்களை கல்விக்குள் கொண்டுவர அரசு நிறைய சிரமப்பட்டிருக்கிறது. மேலும், அக்குழந்தைகள் எளிய பொருளாதாரம் கொண்ட கடைநிலை பெற்றோர்களின் குழந்தைகள். அதனால் அவர்களின் கல்வி எக்காரணம் கொண்டும் தடைப்பட்டுவிடக் கூடாது.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?

தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதுபோலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க மடிகணினி கொடுக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால், ஆன்லைன் கல்வி என்பது உடலுக்கும் மனசுக்கும் கெடுதல்தான். மேலும் கற்றல் என்பது வகுப்பறைக்கு இணையாக கிடைக்கப்போவதில்லை. மேலும், டெக்னாலஜியைப் பயன்படுத்துவதில் பாதுக்காப்பற்ற நிலைமையே அதிகம். ஆன்லைன் கல்வி குறித்த புரிதல் பெரும்பான்மையினருக்கு இல்லை என்பதே யதார்த்தம்”

குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்த, பல பள்ளிகளுக்குச் சென்ற இனியன்: ஆன்லைன் வகுப்புகள் ஏன் நடைபெறுகிறது என்னும் விவாதங்களில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேணும். அதற்காக ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் என்கிறார்கள். ஆன்லைன் வகுப்பைக் காரணம் காட்டி கட்டணம் கட்ட வைத்து, ஆசிரியர்களை விட நிர்வாகத்தினரே பலமடங்கு லாபம் பார்கிறார்கள். அதுவும் நிர்வாகச் செலவுகள் எதுவுமற்ற காலத்தில். அதற்கான தீர்வாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அரசிடம் விண்ணம் வைத்து மானியங்கள் கேட்டு கோரிக்கை வைத்து பள்ளிகள் திறக்கும் வரை குறிப்பிட்ட தொகை அரசே வழங்க வேண்டும். என்னும் ஏற்பாட்டை செய்யலாம். அரசும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பும் இணைந்தால் ஆசிரியரின் சம்பளம் என்பது ஒரு பொருட்டே அல்ல.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?
இனியன்

அனைத்து விஷயங்களும் லாக்டெளனில் பெரும் இழப்பும் மந்த நிலையையும் அடைந்திருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் எனச் சொல்லி பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆன்லைன் வகுப்புகளை முழுதாக ஆதரிப்பவர்களானாலும் சரி, ஒருபக்கம் எதிர்த்தாலும், குழந்தைகள் கல்வி தேக்கம் அடைந்து விடுவார்களோ என அஞ்சி ஆன்லைன் வகுப்புக்கு அனுப்புபவர்களும் இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை நிச்சயம் தேக்கநிலை வரும்தான். ஆனால் குழந்தைகள் அவற்றை எளிதில் கடப்பார்கள். கடக்க முடியாத குழந்தைகளுக்கு அரசு சட்டங்கள் மூலமும், உரிமைகள் மூலமும் முயற்சி செய்து சீர்படுத்த வேண்டும். இது அரசின் செயல்பாடு என அரசுக்கு நாம் அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்: என்கிறார்.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?
விழியன்

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதில் இருக்கும் இடர்பாடுகள் குறித்து விளக்குகிறார் ஆசிரியர் மணிமாறன், “இந்தியா முழுவதுமே ஆன்லைனில் பாடம் கற்பிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்குமே பயிற்சி அளிக்கப்பட வில்லை. இதனால், ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் எல்லா மாணவர்களுமே பதில் அளிப்பார்கள். ஒரு குழப்பம் நிலவும். எதிரில் மாணவர்கள் இல்லாது பாடம் நடத்தும் புதிய அனுபவத்திற்கு ஆசிரியர் தயாராக வேண்டும். மாணவர்களை நேரடியாகப் பார்த்து நடத்தும்போது அவர்கள் கற்றுக்கொள்ளும் விதம் பற்றி அறிந்துகொள்ள முடியும். ஆன்லைனில் அது சாத்தியமில்லை. அடுத்து தொழில்நுட்ப பிரச்னைகள். ஆசிரியர் ஒரு கேள்வி கேட்கிறார் என்றால், இணைப்பு சரியாகவும் வேகமாகவும் இருக்கும் மாண்வர்களுக்கு உடனே கேட்கும். அவரும் உடனே பதில் சொல்லிவிடுவார். ஆனால், இணைப்பு முறையாக இல்லாத மாணவருக்குச் செல்வதிலும் அதற்கு அவர் பதில் சொல்வதிலும் பின்னடைவை அடைவார். அவர் முதல்கேள்விக்கான பதிலைச் சொல்வதற்குள் ஆசிரியர் இரண்டாம் கேள்விக்குச் சென்றுவிடக்கூடும்.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அவசியமா?
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் இடையூறு செய்தால் பாடம் கற்பிப்பததில் சிக்கல் ஏற்படும். அதனால் குழப்பம் ஏற்படும். இந்தக் குழப்பம் ஆன்லைன் கல்வியில் பலமுறை நடக்க வாய்ப்பிருக்கிறது. மாணவர்களை மொபைல் பயன்படுத்த வேண்டாம் என இதுவரை கூறிவந்திருக்கிறோம். ஆன்லைன் வகுப்புகள் வரும்பட்சத்தில் மாணவர்கள் மிக அதிக நேரம் மொபைலப் பார்க்கும் சூழல் நேரும்.

ஆன்லைன் கல்வியில் மதிப்பீட்டு முறையும் ஆன்லைன் வழியாகவே நடக்கும்பட்சத்தில் வாட்ஸப்பில் கேள்வி அனுப்புவதும் அதைப் பெரிது பண்ணி மாணவர் பார்ப்பதும், பதிலை மாணவர் அனுப்புவதை ஆசிரியர் பெரிது பண்ணிப் பார்ப்பதும் நடைமுறையில் சிக்கலானதாக அமையும். ஏனெனில், ஓர் ஆசிரியர் 20க்கும் மேற்பட்டவர்களை மதிப்பீட வேண்டியிருக்கும். அனைத்துக் குழந்தைகளுக்கும் கணினி வசதி இல்லை என்பதால் பெரும்பாலானோர் மொபைல் வழியேதான் கற்க வேண்டும். ஆனால், வீட்டில் பெற்றோரின் மொபைலைத்தான் குழந்தைகள் பயன்படுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோர் எனில், மொபைலை வீட்டில் குழந்தையிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். அது சரியான வழிமுறையா என்பது ஆய்வுக்குரியது.

அடுத்து, குழந்தைகள் வீடியோ கேம் ஆடும்போது ஒரு பதட்டத்தில் இருப்பார்கள். அதேபோன்ற பதட்டத்திற்கு ஆன்லைன் கல்வியால் சூழப்படுவார்களோ என்ற கவலையும் இருக்கிறது. ஏனெனில், எந்த நேரத்தில் கேள்வி கேட்பார்கள், மைக்கை ஆன் செய்வது எப்படி, எப்போது என்ற பதட்டமே இருக்கும்.” என்கிறார்.