மூச்சுத் திணறல் வரும் வரை காத்திருக்க வேண்டாம்…

 

மூச்சுத் திணறல் வரும் வரை காத்திருக்க வேண்டாம்…

தமிழக மருத்துவமனைகளிலும் மூச்சுத் திணறலுடன் நூற்றுக் கணக்கான நோயாளிகள் குவியத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஆக்சிஜன், ஐ.சி.யு படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த மருத்துவமனையில் அத்தனை நோயாளிகள் இறந்தார்கள், இந்த மாவட்ட மருத்துவமனையில் இத்தனை நோயாளிகள் இறந்தார்கள் என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

மூச்சுத் திணறல் வரும் வரை காத்திருக்க வேண்டாம்…

கொரோனா பாதிப்பு தென்பட்ட உடனேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது, தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து நுரையீரலில் நோய்த் தொற்று எவ்வளவு உள்ளது என்பதைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம், அதனால் நமக்கு மிகப்பெரிய பாதிப்பு வராது என்று பலரும் கவனக்குறைவாக விட்டுவிடுவதே அதிக உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாக உள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மருத்துவர்கள் வழங்கும் மாத்திரை, மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் போன்ற பாரம்பரிய சித்த மருத்துவ மருந்துகளையும் பரிந்துரை அடிப்படையில் எடுத்துக்கொள்வது நல்லது. முடிந்தவர்கள் ஆக்ஸிமீட்டர் வாங்கி சுவாசத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 90 முதல் 100 வரை இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் 94க்கு கீழ் வந்துவிட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது நல்லது. 90க்கு கீழ் வந்த பிறகு, மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைகளைத் தேடி அலைவதற்கு முன்பு, ஓரளவுக்கு நலமாக இருக்கும்போதே மருத்துவ உதவியை நாடி, நம்மைப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

எக்காரணத்தைக் கொண்டும் பதற்றம் அடைந்துவிட வேண்டாம். ஓரளவுக்கு நலமாக இருக்கும்போது கொரோனா சாதாரண படுக்கை கொண்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்துவிடலாம். அங்கு அவர்கள் அளிக்கும் மாத்திரை, மருந்துகள் ஒரு சில நாளில் நம்மைக் குணமாக்கிவிடும். அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பி அடுத்த 15 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலைத் தொடர்ந்தால் போதுமானதாக இருக்கும்.

வீட்டில் கொரோனா நோயாளி பயன்படுத்திய ஆக்ஸிமீட்டர், தெர்மோமீட்டர் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதே இப்போதைய சூழலில் நல்லது. வீட்டில் உள்ள கொரோனா நோயாளிக்கு ஒன்று, மற்றவர்களுக்கு என்று ஒன்று வாங்க முடியாதவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் பிறகு ஒரே தெர்மோமீட்டர், ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம்.

கொரோனா நோயாளிக்கு ஆக்ஸிமீட்டர் கொண்டு ஆக்சிஜன் அளவை கணக்கிடுவதற்கு முன்பு சோப் போட்டு நன்கு கைகளைக் கழுவச் சொல்ல வேண்டும். நன்கு கைகளைக் கழுவி, சுத்தமான துணியில் துடைத்து, கை விரல் உலர்ந்த பிறகு ஆக்ஸிமீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை கண்டறியலாம். அவர் பயன்படுத்திய பிறகு கிருமிநாசினியை ஒரு துணியில் நனைத்து, ஆக்ஸிமீட்டரை நன்கு சுத்தம் செய்து அதன் பிறகு மற்றவர்கள் பயன்படுத்துவது நல்லது. மற்றவர்களும் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்திய பிறகு கைகளை சோப் போட்டு கழுவுவது, சானிடைசர் போட்டு சுத்தம் செய்துகொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

நோய் பாதிப்பு தீவிரம் ஆகும் வரை காத்திருக்காமல், முன்னெச்சரிக்கையுடன் விழிப்புடன் இருந்தால் கொரோனா மரணங்களைத் தடுக்கலாம்!