முத்திரை செய்தால் நித்திரை வரும், சுவாசம் சீராகும்!

 

முத்திரை செய்தால் நித்திரை வரும், சுவாசம் சீராகும்!

முத்திரை… இந்த வார்த்தையைக் கேட்டதும் சிலர் வேறுவிதமாக யோசிப்பார்கள். ஆனால், இது நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுக்கவும், வந்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடிய ஒன்று என்பது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம். இதுபற்றி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் துணைப் பேராசிரியர் தீபா சொல்வதைக் கேட்போம்.

முத்திரை செய்தால் நித்திரை வரும், சுவாசம் சீராகும்!பஞ்ச பூதம்:
மனித உடலானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது. பஞ்ச மகா பூதம் எனப்படும் இவற்றில் ஒன்று சரியாக செயல்படவில்லையென்றாலும் பிரச்சினை ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில் முத்திரை செய்தால் பலன் கிடைக்கும். முத்திரை என்பது யோகா, பிராணாயாமம், தியானம், பரதநாட்டியம் செய்யும்போது கைவிரல்களை அழுத்திப்பிடிக்கும் ஒரு நிலையாகும். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். நரம்பு மண்டலம் வழியாக ஆற்றல் தூண்டப்படும்; மனம் மற்றும் உடல்ரீதியாக ஆற்றல் குறையும்போது முத்திரை செய்தால் செல்கள் புதுப்பிக்கப்பட்டு உடலியக்கம் சீராகும்.

நம் கை மற்றும் காலில் உள்ள ஒவ்வொரு விரலும் இந்த பஞ்ச மகா பூதங்களின் வரிசையில்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது. ஆக ஒவ்வொரு விரல்களுக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. எனவே, அந்தந்த ஆற்றல்களுக்குரிய முறைகளுடன் விரல்களின் நுனிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து முத்திரை செய்தால் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் சமநிலைக்கு வரும்.

எப்போதெல்லாம் ஆற்றல் தேவைப்படுகிறதோ அப்போது இந்த முத்திரைகளைச் செய்து பலன் பெறலாம். முத்திரைகளைச் செய்வதால் மன ஆற்றல் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். மேலும் குறிப்பாக மனரீதியான பிரச்சினைகளைப் போக்க இந்த முத்திரை உதவும்.

முத்திரை செய்தால் நித்திரை வரும், சுவாசம் சீராகும்!
சின் முத்திரை:
ஆள்காட்டி விரலை கட்டை விரலின் நுனியில் வைத்து லேசாக அழுத்தம் கொடுத்தபடி உள்ளங்கை கீழ் நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். இதை ஞான முத்திரை என்பார்கள். இந்த முத்திரையைச் செய்வதால் அறிவாற்றல் அதிகரிக்கும். மனரீதியான பாதிப்புகள் சரியாகும். கெட்ட சிந்தனைகள் மற்றும் மோசமான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

இதே நிலையில் விரல்களை வைத்தபடி உள்ளங்கையை மேல் நோக்கி வைத்தால், அது சின் முத்திரை. முத்திரையின் அடையாளமாக பலர் இந்த சின் முத்திரையைக் காட்டுவார்கள். இந்த சின் முத்திரையைச் செய்தால் தூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபகமறதி, கவனமின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம்.

முத்திரை செய்தால் நித்திரை வரும், சுவாசம் சீராகும்!
அபான முத்திரை:
நடு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்தபடி அழுத்திப் பிடிப்பது சூன்ய முத்திரை. இந்த சூன்ய முத்திரையைச் செய்து வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு சரியாகும். இதுமட்டுமல்லாமல் தைராய்டு கோளாறுகள், காதில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். காதில் ரீங்காரமிடுவதுபோல சிலருக்கு சத்தம் வரும், இன்னும் சிலருக்கு காது வலி வரும். அப்போது இந்த சூன்ய முத்திரை செய்வது பலன் தரும்.

கட்டை விரலின் நுனியில் நடு விரல் மற்றும் மோதிர விரலை வைத்துக்கொண்டு ஆள்காட்டி விரலை கட்டை விரலின் கீழே வைக்க வேண்டும். இதை அபான முத்திரை என்பார்கள். இதைச் செய்வதால் வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள கழிவுகள் வெளியேறும். இப்படிச் செய்வதால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் சிறுநீர் பிரச்சினைகள், வாய்வுக்கோளாறுகள் சரியாகும்.

முத்திரை செய்தால் நித்திரை வரும், சுவாசம் சீராகும்!பிராண முத்திரை:
அடுத்தது பிராண முத்திரை. கட்டை விரலின் நுனிப்பகுதியை மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியால் தொடும் நிலை. இந்தநேரத்தில் மற்ற விரல்கள் அனைத்தும் மேல்நோக்கி இருக்க வேண்டும். இந்த முத்திரையைச் செய்வதால் உடலும் மனமும் வலிமைப்படும். ரத்தத்திலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ் விலகும். கண் மற்றும் நரம்புக்கோளாறுகள் சரியாகும்.

கட்டை விரலை மடித்தபடி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மற்ற நான்கு விரல்களையும் அதன்மீது வைக்க வேண்டும். அப்போது அடுத்த கையால் அந்த கையை மூடினால் அது பிரம்ம முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால் நுரையீரலுக்கு மிக எளிதாக ஆக்சிஜன் செல்லும். கட்டை விரலை மடித்து உள்ளே வைத்து மற்ற நான்கு விரல்களைக் கொண்டு மூடினால் அது அதி முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும்”.

எளிய முறையிலான ஒவ்வொரு முத்திரைகளுக்கும் ஒவ்வொருவிதமான பயன்கள் இருக்கின்றன. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றபடி இந்த முத்திரைகளைச் செய்து பலன் பெறலாம்.