உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக

 

உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக

திமுகவோடு இரண்டறக் கலந்த கோஷ்டி பூசல், மற்ற எல்லா இடங்களையும் விட நெல்லை மாவட்டத்தில் அதிகமாகவே இருக்கும். கருப்பசாமி பாண்டியன் மாவட்டச் செயலாளராக இருந்த காலம் தொட்டு, இங்கு ஏழெட்டு கோஷ்டிகள் உண்டு. அதிலும் 2 எம்.எல்.ஏ சீட்டுகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற அடிப்படையில் நெல்லை மாவட்ட திமுக பிரிக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் களம், ரணகளமாக மாறியிருக்கிறது.

உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக


முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாவட்டச் செயலாளராக இருக்கும் நெல்லை கிழக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதில் ஒன்றை திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரகாம் பெல்லிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்காகவும், நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்காகவும் ’ஸ்டாலினின் கிச்சன் கேபினட்’டில் பெரும் தொகையைக் கொடுத்தவர் இவர் என்கிற பேச்சு உண்டு. இந்த முறையும் அதே பாணியில் கிரகாம் பெல் காய்நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு போட்டியாக நெல்லை சிட்டிங் எம்.பி ஞானதிரவியமும் வாளைச் சுழற்றுவதாகக் கூறுகிறார்கள்.

உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக


நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப் மீது ஏகப்பட்ட புகார்களை கட்சியினரே தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். யாரையும் எடுத்தெறிந்து பேசும் இவர் கொஞ்சம் முரட்டு ஆசாமி. இதனால் பலருக்கும் வகாபை பிடிப்பதில்லை. தலைமை பலமுறை கூப்பிட்டு எச்சரித்தும் இவர் திருந்தவில்லை. ஆனாலும் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற விஷயம்தான் வகாபுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இதே மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு நபரை வகாபுக்கு பதிலாக நியமிக்கலாமா? என்கிற எண்ணமும் தலைமையிடம் இருக்கிறதாம்.

உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக


நெல்லை மேற்கு மாவட்டத்திலோ மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், வர்த்தக அணி மாநிலத் துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கும் இடையே ஆரம்பம் முதலே முட்டல், மோதல்தான். 4 எம்.எல்.ஏ சீட்டுகளை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றை தனக்கு அளிக்கும்படி தலைமையிடம் அய்யாதுரை பாண்டியன் வலியுறுத்த, அதற்கு அணைபோட்டு வருகிறார் சிவபத்மநாபன். அவ்வப்போது போஸ்டர் யுத்தம் நடத்தி இரு கோஷ்டியினரும் மோதிக் கொள்கின்றனர். இது தவிர வழக்கறிஞர் அ.துரையும் மாவட்ட செயலாளர் பதவிக்கு முட்டி மோதுகிறார்.

உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் இப்படி நெல்லிக்காய் மூட்டையாக சிதறியிருப்பது தலைமையை அதிர வைத்துள்ளது. தலைமையின் உத்தரவின் பேரில் முதன்மைச் செயலாளர் நேரு அண்மையில் நெல்லைக்குச் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்ல, ஒரு கட்டத்தில் நேரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டாராம்.

உச்சக்கட்ட கோஷ்டி பூசல் – சிதறும் நெல்லை திமுக

’’ 14 எம்.எல்.ஏக்கள் கொண்ட மாவட்டத்திற்கு செயலாளராக இருந்தவன் நான். கடைசியில் வெறும் 4 எம்.எல்.ஏக்கள் கொண்ட மாவட்டத்திற்கும் செயலாளராக இருந்தேன். தலைமை முடிவு பண்ற விஷயங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்’’ என கறாராக பேசிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார் நேரு.
மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளை சென்னை வரும்படி அழைத்திருக்கிறது திமுக தலைமை. மாவட்ட அளவில் மாற்றம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோஷ்டி பூசல் உச்சத்தைத் தொடப்போவதும். கட்சித் தாவல்கள் அரங்கேற இருப்பதும் நிச்சயம் என்கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள்.