குரூப் 1 தேர்வுக்கு பேருந்தில் சென்ற இளைஞர் சுங்கச்சாவடி கம்பி மோதி பலி... ராமநாதபுரம் அருகே சோகம்!

 
accident

ராமநாதபுரம் அருகே குரூப் 1 தேர்வு எழுத அரசுப்பேருந்தில் சென்ற பட்டதாரி இளைஞர், சுங்கச்சாவடியில் உள்ள இரும்பு கம்பி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.   

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தண்டிராதேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் பாண்டியன். இவரது மகன் கோபால கிருஷ்ணன்(30). பட்டதாரியான இவர், டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு கோபால கிருஷ்ணன் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு ராமநாதபுரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் நேற்று காலை பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்தில் அதிகளவு கூட்டமிருந்ததால் கோபாலகிருஷ்ணன் படியில்  நின்றவாறு பயணம் செய்துள்ளார்.

ramnad gh

சத்திரக்குடி சுங்கச்சாவடியில் பேருந்து சென்றபோது அங்கிருந்த இரும்பு கம்பி எதிர்பாராத விதமாக கோபால கிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபால கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.