தென்காசி அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை - இருவர் கைது!

 
murder

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற, நணபர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்பபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (23). கூலி தொழிலாளி. மைலப்பபுரத்தில் உள்ள அவ்வையார் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, ஊருக்கு வந்திருந்த மணிகண்டன், நேற்று அதே பகுதியை சேர்ந்த துரை, சாம்சன் பிளஸ்சிங் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில், மணிகண்டன், துரை மற்றும் சாம்சன் பிளஸ்சிங் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

tenkasi ttn

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இருவரும் மணிகண்டனின் மார்பில் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொலையான மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரை, சாம்சன்பிளஸ்சிங் ஆகியோரை கைது செய்தனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை, நண்பர்களே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.