திருப்பூர் அருகே ஈச்சர் வேன் மோதி இளைஞர் பலி... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
tiruppur

திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த இளைஞர் மீது ஈச்சர் வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அடுத்த வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(27). இவர் பணி காரணமாக நேற்று திருப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஊத்துக்குளி சாலையில் மண்ணரை பகுதியில் சென்றபோது, கார்த்திக் ராஜா முன்னால் சென்ற வாகனத்தை  முந்திச்செல்ல முயற்சித்தார். அப்போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததால், தனது வாகனத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால், சாலை சேதமடைந்திருந்ததால் நிறுத்த முடியாமல் எதிர்பாராத விதமாக வாகனத்தில் நிலைதடுமாறி கார்த்திக்ராஜா கீழே விழுந்தார். 

tiruppur

அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் வேன் கார்த்திக் ராஜாவி மீது ஏறியது. இந்த விபத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.