வீட்டில் திருட முயன்றபோது பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

 
dead body

நாகையில் வீடுபுகுந்த திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நாகை டாட்டா நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் காளிதாஸ். இவரது மனைவி மலர்செல்வி. நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு புறப்பட்டு சென்ற நிலையில், இரவில் வீட்டில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால், மலர்செல்வி, அவரது மாமியார் கண்ணம்மா ஆகியோர் கண் விழித்துப் பார்த்தபோது, இளைஞர் ஒருவர் வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது.

nagai

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட முயன்றனர். அப்போது, அந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி சத்தமிட கூடாது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திருடிய நகை, பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். அப்போது, மலர்செல்வி திருடன் திருடன் என சத்தமிட்டார். இதனை கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரது வீட்டில் இருந்து தப்பியோட முயன்ற இளைஞரை மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து, அவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து, நாகை டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் காளிதாஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.