மனைவியை அவதூறாக பேசிய அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... திருப்பத்தூர் அருகே பரபரப்பு!

 
murder

திருப்பத்தூர் அருகே மதுபோதையில் மனைவியை அவதூறாக பேசிய அண்ணனை, தம்பி சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பத்தூர் காக்கங்கரை அருகே உள்ள ஆவல்நாய்க்கன்பட்டி ஊராட்சி சோளச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (60). இவரது மகன்கள் கோவிந்தராஜ் (42), கனகராஜ் (40).  கோவிந்தராஜுக்கு, கௌரம்மா என்ற மனைவியும், 2 பிள்ளைகள் உள்ளனர். கனகராஜுக்கு பூங்கொடி என்ற மனைவியும், 3பிள்ளைகளும் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் மரம் ஏறும் தொழில் செய்து வந்தனர். மேலும், ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு கனகராஜின் மனைவி பூங்கொடி (39), தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூ கட்டி கொண்டிருந்தார்.

tirupattur gh

அப்போது, மதுபோதையில் வந்த கோவிந்தராஜ், தனது வீட்டிற்கு செல்ல வழி விடும்படி கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போதையில் இருந்த கோவிந்தராஜ், பூங்கொடியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து. பூங்கொடி தனது கணவர் கனகராஜுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனராஜ், வீட்டில் இருந்து மரம் வெட்டும் கத்தியை எடுத்து, அண்ணன் கோவிந்தராஜை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியை அவதூறாக பேசிய அண்ணனை தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.