மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை - 4 இளைஞர்கள் கைது!

 
arrest

சேலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ராமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தை வேலு (45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ஆம் தேதி ரயில்வே தண்டவாளத்தின் அருகேயுள்ள புதரில் அடித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

police

உடல் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி  கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் 4 இளைஞர்கள் தண்டவாளம் பகுதியில் இருந்து வெளியேறுவது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சதிஷ்குமார்(24), தேவேந்திரன்(24), மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரகாஷ்(21) மற்றும் அனுப்பூரை சேர்ந்த தீபக்குமார் என்பது தெரிய வந்தது.

இதனிடையே, அந்த 4 இளைஞர்களும் தொழிலாளி குழந்தை வேலுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு அயோத்தியாபட்டணம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். தொடர்ந்து, 4 பேரையும் கைதுசெய்த காரிப்பட்டி போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் குழந்தை வேலுவை அடித்துக்கொன்றது தெரியவந்தது.