வீட்டை எழுதி தர மறுத்த பெண் தலை துண்டித்து படுகொலை - உறவினர் வெறிச்செயல்!

 
murder

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வீட்டை எழுதி தர மறுத்த பெண்ணை தலை துண்டித்து படுகொலை செய்த உறவினர் போலீசில் சரணடைந்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி பாப்பாத்தி அம்மாள் (62). இவர்களுக்கு குழந்தை இல்லை. சுடலை உடல்நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் பாப்பாத்தி அம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், அவரது பக்கத்து வீட்டில் உறவினரான முருகன் (42) என்பவர், பாப்பாத்தி அம்மாள் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால், அவர் மறுத்து விட்டார். 

tenkasi ttn

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முருகனின் மனைவி மகாலட்சுமி, தாயார்  ஆகியோர் பாப்பாத்தி அம்மாளிடம் வீடு குறித்து கேட்டபோது, அவர்களை பாப்பாத்தி அம்மாள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த முருகன், பாப்பாத்தி அம்மாளை கொலை செய்ய தீர்மானித்தார். தொடர்ந்து, ரேஷன் கடைக்கு சென்று விட்டு பால்பண்ணை தெரு  வழியாக திரும்பி கொண்டிருந்த பாப்பாத்தி அம்மாளை, முருகன் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஆத்திரம் தீராத முருகன், தான் வைத்திருந்த கோடரியால் பாப்பாத்தி அம்மாளின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துண்டான தலையை எடுத்து, பக்கத்து தெருவில் வசிக்கும் பாப்பாத்தி அம்மாளின் அண்ணன் வீட்டின் முன்பு வைத்த முருகன், பின்னர் புளியரை காவல்  நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாப்பாத்தி அம்மாளின் உடல் மற்றும் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.