தீபாவளி பண்டிகையை ஒட்டி களைக்கட்டியது... ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் விற்பனை ஜோர்!

 
erode textile market erode textile market

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஈரோடு ஜவுளி மார்க்கெட்டிற்கு வெளிமாநில வியாபாரிகள் அதிகளவு வருகை தந்ததால், மொத்த வியாபாரம் களை கட்டியது. 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி சந்தை உலகப் புகழ் பெற்றது.  இந்த ஜவுளி சந்தைக்கு  கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்து செல்வார்கள்.

மற்ற வெளி இடங்களைக் காட்டிலும் இங்கு  ஜவுளி ரகங்கள் குறைவான விலையில் கிடைப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். மொத்தம் 740 கடைகள் செயல்பட்டு வந்தன.  தற்போது இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த  ஜவுளி வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகின்றன.  இதனால் தற்போது இந்தப் பகுதியில் 240 கடைகளும், சாலையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தளர்வுக்கு பிறகு தற்போது ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களே இருப்பதால் கடந்த சில நாட்களாக ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.  

erode textile market

இன்று கூடிய ஜவுளி சந்தையில், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம் போன்ற பகுதியில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.இன்று மட்டும் 70 சதவீதம் மொத்த வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், 60 சதவீதத்திற்கும் மேல் சில்லரை வியாபாரம் நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. திருப்பூர் பனியன் காட்டன் கவுன், சுடிதார், மசகலி சுடிதார், வேட்டி ரகங்கள், பெண்களுக்கான சேலை வகைகள், துண்டு போன்றவை அதிக அளவில் விற்பனை ஆனது. இன்னும் ஒரு வாரத்தில் 90 சதவீதம் அளவு வியாபாரம் நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.