தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

 
theni

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ள செவிலியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி, தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, கொரானா தடுப்பூசி பணியில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் சோர்வு உண்டாவதாகவும், எனவே  மாவட்ட ஆட்சியர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறினர்.

theni

மேலும், தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரவும், இல்லாவிட்டால் தனியார் வாகன வசதிக்குறிய தொகையை வழங்கவும், வலியுறுத்தினர். அதேபோல், துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடங்கள் நிரப்புவதை நிறுத்தவும், தடுப்பூசி பணியில் அரசியல் தலையீடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், கொரானா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேர்வதாக தெரிவித்த கிராம சுகாதார செவிலியர்கள், எனவே சனிக்கிழமைகளில் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன்,  தொற்று நோய் தடுப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்ட அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.