கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்!

 
cbe

கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிக்குள் 2 கார்கள் மற்றும் ஆட்டோ சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதாள சாக்கடை மற்றும் தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலை ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும், காவல் துறையினர் அறிவிப்பு பலகை மற்றும் தடுப்பை பலகை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுட்டு வருகின்றனர்.

cbe

இந்த நிலையில், இன்று காலை தடையை மீறி சிலர், அந்த பகுதியில் கார்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தியுள்ளனர். இதில் 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ எதிர்பாராத விதமாக குழாய் பதிக்கப்பட்ட பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டன. இதனால் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதனை அடுத்து, வாகன ஓட்டிகள் மற்றும் சாலைப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து பள்ளத்தில் சிக்கியிருந்த 3 வாகனங்களையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் காரணமாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.