மகனிடம் பணம் கேட்டு மிட்டியதால் ஆத்திரம்... இளைஞரை குத்திக்கொன்ற விசிக பிரமுகர் கைது!

 
murder

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மகனிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை குத்திக்கொன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கீழ ஊரணியை சேர்ந்தவர் கணேசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன் நிஷாந்த். இவர் தேவக்கோட்டையில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நிஷாந்திடம், காரைக்குடி அருகே உள்ள ரஸ்தா சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுஅருந்த பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிஷாந்த், தனது தந்தை கணேசனிடம் தெரிவித்துள்ளார்.

sivagangai

இதனால் ஆத்திரமடைந்த கணேசன், அவரது நண்பர் சுந்தரமாணிக்கம் ஆகியோர் தேவக்கோட்டை ரஸ்தா பகுதியில் ராஜ்குமாரை சந்தித்து, நிஷாந்திடம் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து கண்டித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சோமநாதபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசிக பிரமுகர் கணேசன், அவரது கூட்டாளி சுந்தரமாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர்.