பெருந்துறை அருகே வேன் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து... 15 பேர் படுகாயம்!

 
accident

பெருந்துறை அருகே மாப்பிள்ளை பார்க்க சென்றுவிட்டு திரும்பியபோது சுற்றுலா வேன் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 15 பேர் பலத்த காயமடைந்தனர். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் வாய்ப்பாடி ஊராட்சி சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(57). இவரது மகள் சங்கீதாவிற்கு, ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த கவின் என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, நேற்று மாப்பிள்ளை வீடு பார்த்துவிட்டு பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் என 16 பேர் சுற்றுலா வேனில் வாய்ப்பாடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிர் திசையில் கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு மறுபுறம் வந்த வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

acciedent

இதில், வேன் ஓட்டுநர் பிரவீன், பெரியசாமி, அவரது மனைவி கண்ணம்மாள், சுள்ளிமேட்டை சேர்ந்த பூங்கொடி, சரஸ்வதி, உமாமகேஸ்வரி, செல்லம்மாள் மற்றும் காரில் வந்த கேரளாவை சேர்ந்த நவீத்(34), அவரது மனைவி நிசானா உள்ளிட்ட 15 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

accident

விபத்து குறித்து தகவல் அறிந்த பெருந்துறை அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.