கோவில்பட்டி அருகே மின்கம்பம் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி

 
accident

கோவில்பட்டி அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு ஹரி, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் முருகன் (54), ரகுநாதன்(40) மற்றும் கோபால்(39) ஆகியோருடன் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இயங்கி வரும் தனது டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். 

kovilpatti

இன்று அதிகாலை, கோவில்பட்டி அடுத்துள்ள இடைச்செவல் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் கார் நொறுங்கிய நிலையில், மின்கம்பமும் சரிந்து கிழே விழுந்தது. இந்த விபத்தில் கோபால் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹரி மற்றும் ரகுநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையிலான போலீசார், காயமடைந்த ஹரி மற்றும் ரகுநாதனை மீட்டு கோவில்பட்டி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், உயிரிழந்த கோபால், முருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.