திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது... நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்!

 
hunting

திருவண்ணாமலையில் வன விலங்குகளை வேட்டையாட  முயன்ற 2 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனவர் சிவக்குமார், வனகாப்பாளர் பாலாஜி மற்றும் வனவலர்கள் அடங்கிய குழுவினர் சொரகொளத்தூர் காப்புக்காடு கிழக்கு பீட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேரை, சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் பிடிக்க முயன்றனர்.

tiruvannamalai

அப்போது, 2 பேர் பிடிபட்ட நிலையில், மற்ற இருவர் வாகனத்துடன் தப்பிச்சென்றனர்.  இதனை அடுத்து, பிடிபட்டவர்களிடம் வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கொண்டம் காரியந்தல் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சுமன் (31) மற்றும் கானலாப்பாடியை சேர்ந்த விஜய் (19) என்பதும், இவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.