திருச்சி பெரியசூரியூர் ஜல்லிட்டில் காளை முட்டியதில் உரிமையாளர் பலி!

 
dead

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாட்டின் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில், மாட்டுப் பொங்கலை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து, வாடிவாசலில் இருந்து காளைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

dead body

இதனையொட்டி, கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டிற்கு அனுமதித்து வந்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் (30) தனது காளையுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக காளை மீனாட்சி  சுந்தரத்தின் தொடையில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். 

இதனை அடுத்து, அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மீனாட்சி சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டி போட்டிக்கு காளையை அழைத்து வந்த உரிமையாளர் மாடு முட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.