திருப்பூர் தமிழக - வடமாநில தொழிலாளர்கள் மோதல் விவகாரம்; பீகாரை சேர்ந்த இருவர் கைது

 
arrest

திருப்பூரில் தமிழக - வடமாநில தொழிலாளர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் தமிழக தொழிலாளர்களை, வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போன்ற வீடியோ காட்சி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த திருப்பூர் மாநகர காவல் துறை, அந்த வீடியோ முற்றிலும் வதந்தி என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்றும் தெரிவித்து இருந்தது. மேலும், இந்த வீடியோ விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிடுவோர் மீதும், சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீதும் சட்டப்பூர்வ நவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

tpr

மேலும், போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த ரஜத்குமார்(24) மற்றும் பரேஷ்ராம்(27) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தவறான பதிவுகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் துறை எச்சரித்து உள்ளது.