தருமபுரி அருகே காரில் யானை தந்தங்கள் கடத்திய மூவர் கைது!

 
ivory

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விற்பனை செய்வதற்காக காரில் 2 யானை தந்தங்களை கடத்திச்சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக யானை தந்தங்கள் கடத்துவதாக வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தருமபுரி மாவட்ட வனஅலுவலர் அப்பல்ல நாயுடு உத்திரவின்படி, தருமபுரி வனக்கோட்டத்தை சேர்ந்த வனப்பணியாளர்கள் அடங்கிய குழு, வனஉயிரின குற்ற தடுப்பு சார் குழுவினர் ஆகியோர் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.  

arrest

இந்த நிலையில், பென்னாகரம் வட்டம் ஏரியூர் அடுத்த சோகத்தூர் கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டபோது, அந்த வழியாக சென்ற சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் சுமார் 25 கிலோ 400 கிராம் எடை உடைய 2 யானை தந்தங்களை விற்பனைக்காக கடத்திச்சென்றது தெரிய வந்தது. 

இதுதொடர்பாக காரில் வந்த, பவளந்தூரை சேர்ந்த சின்னசாமி, பிலிகுண்டுலுவை சேர்ந்த வினோத் மற்றும் நெருப்பூரை சேர்ந்த கார்த்தி ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம்  ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தலைமறையவாக இருக்கும் இருவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.