சிறுமுகையில் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டல் - சாமியார் கைது

 
sirumugai

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம், மத்திய அரசு அதிகாரி என மிரட்டி பணம் பறிக்க முயன்ற சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கிச்சகத்தியூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், அதே பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். இவர் சிறுமுகையில் உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம், தன்னை அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி என கூறி, கடைகளில் போலி பட்டுசேலைகளை விற்பனை செய்வதாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

arrest

இந்த நிலையில், மத்திய அரசு அதிகாரி என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் சிறுமுகையில் உள்ள நாகராஜ் என்பவரது ஜவுளிக்கடைக்கு சென்ற ராஜ்குமார் அங்கு, மத்திய அரசு அதிகாரி என கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பின்னர், கடையில் போலி பட்டு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என கூறிய ராஜ்குமார், உரிய ஆவணங்களை கேட்டுள்ளார். மேலும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து,  சிறுமுறை கைத்தறி பட்டுசேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவரான நாகராஜ், போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில்,  போலீசார் விசாரணை மேற்கொண்டு கிச்சகத்தூரில் இருந்த ராஜ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மீது மத்திய அரசு அதிகாரி என பொய் கூறியது,  மோசடி வழக்கு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.