மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

 
mdu

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்தும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா. பி.எஸ்சி பட்டதாரியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் மணிகண்டன் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், மணிகண்டன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவுசல்யா பல முறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

fire

இதனை தொடர்ந்து, நேற்று கௌசல்யா, தனது தாய் அழகம்மாளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென அழகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.  இதனை கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை காப்பாற்றி, தண்ணீரை ஊற்றினர்.

தொடர்ந்து, அழகம்மாள், அவரது மகள் கௌசல்யா ஆகியோரை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக ஆடசியர் அலுவலகத்தில் நேற்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.