ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக உயர்வு​​​​​​​!

 
hogenakkal

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

hogenakkal

 கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணியில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,800 கனஅடியாக இருந்தபோதும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பரிசல் இயக்கவும், ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. மேலும், ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்