மனைவியின் கள்ளக்காதலனை மதுவிருந்து வைத்து கொன்ற கணவர்... ஓசூரில் கொடூரம்!

 
rmd murder

ஒசூரில் 2-வது மனைவியின் கள்ளக்காதலனுக்கு மதுவிருந்து வைத்து பாட்டிலால் குத்தி படுகொலை செய்த கணவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என்.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவரது 2-வது மனைவி காவேரி (42). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், காவேரிக்கு, ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி சதீஷ்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த லட்சுமணன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், காவேரி வெங்கடேஷ் உடனான தொடர்பை கைவிடவில்லை.

hosur

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், சதீஷை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு லட்சுமணன், தனது நண்பரான மகேந்திரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து, சதீஷை மதுஅருந்துவதற்காக என்.பி.அக்ரஹாரத்துக்கு வரவழைத்து உள்ளனர்.அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது லட்சுமணன் தனது மனைவி உடனான கள்ளத்தொடர்பு குறித்து சதீஷிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த லட்சுமணன் மதுபாட்டிலை உடைத்து சதீஷின் கழுத்தில் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார்.  

தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் என 4 பேரை கைது செய்தனர். மனைவியின் கள்ளக்காதலனுக்கு மதுவிருந்து வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.