உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி சிறுமி பலி!

 
drowning

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் நித்திகா(7). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன், அங்குள்ள கிணற்றின் மேல் பகுதியில் உள்ள சுற்றுப்பாதையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நித்திகா கிணற்றில் தவறி விழுந்தார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த மற்ற சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

kallakurichi ttn

இதனை கண்ட அங்கு வந்த கிராம மக்கள் உடனடியாக கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் நித்திகா கிடைக்கவில்லை. இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து, எலவனாசூர்கோட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை குமரேசன் அளித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.