பிறந்தநாளையொட்டி மதுஅருந்தியபோது விபரீதம்... பெயிண்டரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நண்பர்!

 
Murder Murder

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த நவ்வலடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ரமேஷ்(31). இவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். ரமேஷ், தனது பிறந்த நாளையொட்டி திசையன்விளை பகுதியை சேர்ந்த நண்பர் முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். மதுபோதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, முருகானந்தம் இரும்பு கம்பியால் தாக்கியதில் ரமேஷ் படுகாயம் அடைந்தார்.

arrested

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திசையன்விளை போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் ரமேஷின் தந்தை சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெயிண்டரை நண்பனே அடித்துக்கொன்ற சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.