சாலைப்பணிக்காக தோண்டிய குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன் பலி!

 
dead

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 4 வழிச் சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள  சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மலைராஜா. கூலி தொழிலாளி. இவரது 9 வயது மகன் சோனை. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு வந்தார். நேற்று காலை பெற்றோர் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், சிறுவன் சோனை வீட்டில் தனியாக இருந்துள்ளான். மாலை பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சோனையை காணவில்லை. இதனால் பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

madurai

இதனால், சந்தேகத்தின் பேரில் வீட்டின் அருகே 4 வழிச் சாலைக்காக தோண்டப்பட்ட குழியில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது, குழிக்குள் தேங்கியிருந்த மழைநீரில் சிறுவன் சோனை மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலைப்பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.