காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சியில் காதல் திருமணம் செய்த 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் லியோ அமல்ராஜ். தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பவுலினா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் பாலக்கரை ஆட்டுக்கார தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், லியோ அமல்ராஜுக்கும், பீட்டர் பவுலினாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

trichy

நேற்று முன்தினம் தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், பீட்டர் பவுலினா கோபித்துக்கொண்டு  தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டில் திடீரென பீட்டர் பவுலினாவை காணாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் பாலக்கரை ஆட்டுக்காரத் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பீட்டர் பவுலினாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி பீட்டர் பவுலினாவின் பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் அவர் உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.