கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஆசிரியர் தற்கொலை!

 
poison

நெல்லை பாளையங்கோட்டையில் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

நெல்லை பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சேர்ந்தவர் சாம்சன் (56). இவர் மானூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மேரிவிக்டோரியா. இவர் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணக்கரை பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆசிரியர் பணிக்கு இடையே சாம்சன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில், இவரிடம் தொழிலதிபர்கள் சிலர் ரூ.3 கோடி வரை பணம் பெற்ற நிலையில், கொரோனாவை காரணம் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக வட்டியும் கொடுக்காமல், அசலும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

nellai gh

இதில், சாம்சன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாம்சன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆசிரியர் சாம்சன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தனது கணவரிடம் கடன் பெற்றுக்கொண்டு திருப்பி தராத  தொழிலதிபர்களால் சாம்சன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது மனைவி மேரி விக்டோரியா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.