மாணவிகள் பாலியல் புகார் எதிரொலி... திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்வைப்பு!

 
dgl protest

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாருக்கு உள்ளான தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்வைத்த அதிகாரிகள், தப்பியோடிய கல்லூரி தாளாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக அமமுக பிரமுகரான ஜோதி முருகன் என்பவர் இருந்து வருகிறார். இந்த கல்லூரி விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வரும் நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, தாளாளர் ஜோதி முருகன் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. 

dindigul

பாலியல் தொல்லை அளித்த தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென திண்டுக்கல் - பழனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன், ஏஎஸ்பி அருண் கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, காப்பாளர் அச்சர்னாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஜோதி முருகனை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான சுரபி நர்சிங் கல்லூரிக்கு அதிகாரிகள் நேற்று அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.