காரில் லிப்ட் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

தென்காசி அருகே காரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள பலபத்திர ராமபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(35). இவர் சொந்தமாக பொக்லைன், டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் மகள்கள் உள்ளனர்.  இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை முத்துசாமி, தனது வீட்டில் இருந்து சங்கரன்கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

tenkasi ttn

தெற்குமாவிலியூத்து  பகுதியில் சென்றபோது பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவியை பார்த்த முத்துசாமி, பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை காரில் ஏற்றியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவியும் காரில் ஏறி சென்றுள்ளார். காட்டுப் பகுதியில் சென்றபோது திடீரென காரை நிறுத்திய முத்துச்சாமி, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி அலறி துடிக்கவே, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மாணவியை மீட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்ற முத்துசாமியை பிடித்து தர்மஅடி கொடுத்த அந்த பகுதி பொதுக்கள், பின்னர் அவரை ஊத்துமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அங்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமியை கைது செய்தனர்.