ஓசூர் அருகே பேருந்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு!

 
hosur

ஓசூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காததால் அரசுப்பேருந்தில் இருந்து குதித்த பிளஸ் 2 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவ்யாஸ்ரீ(17). இவர் கெலமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து நவ்யாஸ்ரீ, கெலமங்கலத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

hosur

சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தம் வந்தும், அரசுப்பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த மாணவி ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தார்.  இதில் மாணவி பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு மாணவி நவ்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.