தொடர் பாலியல் தொல்லை... பெண் துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 
poison

திருவாரூரில் மேலாளர் பாலியல் தொல்லை அளித்ததால், நகராட்சி பெண் துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவாரூர் நகர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(30). இவருக்கு திருமணமாகி  2 மகன்கள் உள்ளனர். தமிழ்செல்வி கடந்த 5 ஆண்டுகளாக  திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்செல்விக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளரான முத்துச்செல்வன் என்பவர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் மேலாளரை கண்டித்துள்ளனர். எனினும் அவர் முத்துச்செல்விக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். 

thiruvarur

இந்த நிலையில், நேற்று காலை பணிக்கு சென்ற தமிழ்செல்வியிடம் மேலாளர், மேலாளர் முத்துசெல்வன் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி, அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். பின்னர், மடப்புரம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு மருத்துவர்கள் தமிழ்செல்வியை பரிசோதித்தபோது  அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் மருத்துவ சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளார். தொடர்ந்து, பாலியல் தொல்லை குறித்து தமிழ்செல்வி திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.