கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது!

 
ration rice

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு பிக்அப் வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று காலை நெடுஞ்சாலை ரோந்து  போலீசார் வாகனம், கம்பம் மெட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, போலீசார் வாகனத்தை  கண்டதும் கேரளா மாநிலம் கம்பமெட்டை நோக்கி சென்ற பிக்கப் வேன் ஒன்று,  மீண்டும் கம்பத்தை நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தது.

arrest

அப்போது, புறவழிச் சாலையில் நின்றிருந்த தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் என்பவர் பிக்கப் வாகனத்தை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து, ஓட்டுநரை கம்பம் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கம்பம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (38) என்பதும், அவர் ஏற்கனவே இதேபோல் ரேஷன் அரிசி கடத்தி போலீசாரை தாக்கிவிட்டு தப்பி சென்றவர் என்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட ரேஷன் அரிசி மற்றும் பிக்அப் வாகனம் ஆகியவை தவமணி (60) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.  இதனை அடுத்து, போலீசார் வேன் ஒட்டுநர் சுப்பிரமணி  உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்அப் வேனையும் பறிமுதல் செய்தனர்.