பள்ளி மாணவியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை... கோவில் பூசாரி போக்சோவில் கைது!

 
kodaikanal

கொடைக்கானலில் பள்ளி மாணவியை ஒரு வாரமாக அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் அதேபகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர். 

அவரது செல்போன் ஐ.எம்.ஐ நம்பரை வைத்து தேடியபோது, கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி ராமசுந்தர் என்பவரிடம் அடிக்கடி பேசிய வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில், பூசாரி ராமசுந்தரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில், சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் திருப்பத்தூரை சேர்ந்த சரண்ராஜ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். 

pocso

சம்பவத்தன்று  காதலனை பார்ப்பதற்காக மாணவி தனது உடைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார். வழியில், மாணவியை கண்ட பூசாரி ராமசுந்தர் நேரமாகி விட்டதால் பேருந்து இல்லை என்றும், தனது அறையில் தங்கிவிட்டு மறுநாள் பேருந்துக்கு செல்லும்படியும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மாணவி அவருடன் சென்ற நிலையில், அறையில் அடைத்து வைத்து ஒரு வாரமாக பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, ராம்சுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.