சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.07 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 7 லட்சம் ரொக்கப்பணமும், 2.5 கிலோ தங்கம் மற்றும் 4.5 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், புகழ்பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்வர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. 

hundiyal

அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் செல்வராஜ் (கூடுதல் பொறுப்பு), இந்து சமய அறநிலையத்துறை ஆட்சித்துறை திருச்சி உதவி ஆணையர் மோகன சுந்தரம், உறையூர் வெக்காளி அம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் கண்காணிப்பாளர் லட்சுமணன், மணச்சநல்லூர் பகுதி கோவில ஆய்வாளர் பிருந்தா நாயகி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள்,பக்தர்கள், வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டனர். அப்போது, திறக்கப்பட்ட 14 உண்டியல்களில் இருந்து 1 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து, 851 ரூபாய் ரொக்கப்பணம், 2 கிலோ 520 கிராம் தங்கமும், 4 கிலோ 510 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாகவும், மேலும், 114 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.