வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி... தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் மகன் கைது!

 
erode

ஈரோட்டில் வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகரின் மகன் வினோத்குமார் என்பவரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70 ஆயிரம் என ரூ.2 கோடி வரை மார்க்கெட் சங்க நிர்வாகிகள் வசூலித்துள்ளனர். பின்னர், ஈரோடு நசியனூரில் 20.5 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதனை வியாபாரிகளுக்கு கிரையம் செய்யாமல், சங்க நிர்வாகிகள் அவர்களது பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். வியாபாரிகளிடம் வசூலித்த பணத்தையும் திரும்ப தராமல் ரூ.2 கோடியையும் மோசடி செய்தனர். 

arrest

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும், அதிமுக, மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல்மேட்டினை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும், அதிமுக, கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த முருகசேகர் என்ற முருகநாதன், பொருளாளரும், அதிமுக, வார்டு செயலாளருமான ஈரோடு இந்திரா நகரை சேர்ந்த வைரவேல், சங்க துணை தலைவர் குணசேகரன், துணை செயலாளர் ஆறுமுகம், பி.பி.கே.பழனிச்சாமியின் 2வது மனைவி மேகலா, முருகசேகர் மனைவி சாந்தி, குணசேகரன் மனைவி ஜோதிமணி, ஆறுமுகம் மனைவி ரேவதி, வைரவேல் மனைவி ஜெயந்தி, பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் ஆகிய 11 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இதில், கடந்த 28ஆம் தேதி வியாபாரிகள் சங்க பொருளாளர் வைரவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகி பி.பி.கே. பழனிசாமியின் மகனான வினோத்குமாரை(28) நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் அவரது தந்தை, அம்மா உட்பட 9 பேர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர்.