தூத்துக்குடியில் ரூ.10 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் - போலீசார் அதிரடி!

 
redsandal wood

தூத்துக்குடியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அடுத்த புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக, தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தூத்துக்குடி ஊரக ஏ.எஸ்.பி சந்தீஷ் தலைமையிலான போலீசார், நேற்று மாலை அந்த குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

redsandal

அப்போது, அங்கு தார்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருந்த டாரஸ் லாரியை கண்ட போலீசார், அதில் தார்ப்பாயை அகற்றி பார்த்தனர். அப்போது, லாரியில் ஏராளமான செம்மரக்கட்டைகள் பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, சுமார் 20 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.

போலீசாரின் விசாரணையில் ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்திவந்து, வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக குடோன்  உரிமையாளர், ராகேஷ் (45), லாரி உரிமையாளர் ராஜேஷ், லாரி ஓட்டுநர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.  பிடிபட்ட செம்மரக்கட்டைகளை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.