"ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி" - முதல்வர் ஸ்டாலின்

 
cm mkstalin

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும்,  திமுகவின் லட்சிய பயணம் தொடரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம்  திறப்புவிழா உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

cm

இந்த விழாவில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல வேறு துறைகள் சார்பில்  93 பயனாளிகளுக்கு, 355 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனோ காலம் என்பதால்  காணொலி காட்சி மூலம் இவ்விழாவில் பங்கேற்பதாக தெரிவித்தார்.  பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள்  மூலம் 1,311 படுக்கை மற்றும் கொரோனோ சிகிச்சைக்காக 420 படுக்கை வசதிகளை ஏற்படுத்திய தொழிற்நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்தனர். 

supreme court

ஈரோடு மக்களின்  20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார். விழாவில் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், உச்சநீதிமன்றம் வழங்கிய ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத  இடஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளது என்றும், இதற்காக  திமுக சட்டப்போராட்டம் நடத்தியதாகவும்,  உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு  கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும், திமுகவின் லட்சிய பயணம் தொடரும் எனவும் பேசினார்.