ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த 60 மாடுகள் மீட்பு!

 
ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 60 மாடுகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில், கொள்ளிடம் ஆற்றில் 35 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக தண்ணீர்  சென்றுகொண்டுள்ளது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தில் மேய்ச்சலுக்காக சென்ற 60 மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கால் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் சிக்கிக் கொண்ட கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தன. 

ariyalur

இதனை கண்ட மாட்டின் உரிமையாளர்கள் உடனடியாகதீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று, மணல் திட்டில் நின்ற மாடுகளை மீட்டு கிராமத்தினர் உதவியுடன் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். முதற்கட்டமாக 32 மாடுகள் மீட்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து 28 மாடுகள் மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.