ஈரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோரிக்கை!

 
erode

ஈரோடு பெரிய சடையம்பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய வேண்டும் என கலெக்டர்  அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை  வருவாய் அலுவலர் முருகேசனிடம் வழங்கினர்.  அப்போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர்.

collector office erode

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய சடையம்பாளையம் பகுதியில் 16 மீட்டர் உயரத்தில் 7.50  லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீர்த்தேக்க தொட்டி கட்டும்போது, அதற்கு அமைக்கப்பட்ட தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு பழுது பார்த்து சரிசெய்யப்பட்டு கலர் பெயிண்ட் அடிக்க பட்டுள்ளது. மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றும்போது, டேங்கில் இருந்து தண்ணீர் அதிக அளவில் ஒழுகுகிறது.

தொடர்ந்து, பிளாஸ்டர் பேஸ்ட் ஒட்டி தண்ணீர் ஒழுகுவதை சரிசெய்து வருகிறார்கள். இருந்தாலும் தண்ணீர் தொடர்ந்து ஒழுகிக்கொண்டே இருக்கிறது. எனவே பெரிய சடையம்பாளையம் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் முழு கொள்ளளவு நீர் ஏற்றி, தண்ணீர் ஒழுகுவதை பார்வையிட்டும், மேல்நிலை தொட்டி கட்டுமானப் பணிகள் தரமானதாக உள்ளதா? என ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.