போலீஸ் தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக புகார்... சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்!

 
slm protest

சேலம் அருகே போலீசார் தாக்கியதால் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக கூறி, ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் கரூப்பூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி அம்சலா. கடந்த 10ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் கணவன் - மனைவி இருவரையும் சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பிரபாகரன் நாமக்கல் சிறையிலும், அம்சலா சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சிறையில் இருந்த பிரபாகரனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

dead body

பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் நள்ளிரவில் உயிரிழந்தார். இதனை அறிந்த பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீசார் தாக்கியதால் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி பிரபாகரனை தாக்கிய சேந்தமங்கலம் போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

மேலும், பிரபாகரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், சேலம் சிறையில் உள்ள அவரது மனைவியை விடுதலை செய்யவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் மாநகர உதவி ஆணையர் வெங்கடேஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  1 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் காரணமாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.